அமெரிக்காவுடனான மாநாட்டை  இரத்து செய்ய நேரிடும் – வடகொரியா எச்சரிக்கை!

Thursday, May 17th, 2018

அணுஆயுதத்தை தன்னிச்சையாக கைவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அமெரிக்காவுடனான மாநாட்டை ரத்து செய்ய நேரிடும் என்று வடகொரியா திடீரென எச்சரித்துள்ளது.

அணுஆயுதம் தொடர்பாக கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென்கொரியா, வடகொரியா நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அந்த இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றம் சிறிது தணிந்தது. இதேபோல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் வரும் ஜுன் மாதம் 12ஆம் தேதி அமைதி பேச்சுவார்த்தை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், “மேக்ஸ் தண்டர்’ என்ற பெயரில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இராணுவம் ஒத்திகை நடத்தியது. இதைக் கண்டித்து, தென்கொரியாவுடன் புதன்கிழமை நடக்கவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா அதிரடியாக ரத்து செய்தது. இதையடுத்து, அமெரிக்காவுடனான மாநாட்டையும் ரத்து செய்ய நேரிடும் என வடகொரியா எச்சரித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கிம் கி கிவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தன்னிச்சையாக அணுஆயுதங்களை கைவிட வேண்டும் என்று எங்கள் நாட்டை அமெரிக்கா கட்டாயப்படுத்த முயன்றால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் விரும்ப மாட்டோம். சிங்கப்பூரில் ஜுன் 12ஆம் தேதி, அமெரிக்க அதிபர்-வடகொரிய அதிபர் இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து வடகொரியா மறுபரிசீலனை செய்யும்.

லிபியா நாட்டில் மேற்கொள்ளப்பட்டது போல, வடகொரியாவில் அணுஆயுத ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்திருப்பதை கண்டிக்கிறோம். லிபியா அல்லது ஈராக் நிலையை, எங்கள் நாட்டில் ஏற்படுத்த நினைப்பது தீய எண்ணமாகும். அதை அனுமதிக்க மாட்டோம்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அணுஆயுதத்தை கைவிட்டால் வடகொரியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்கா உதவி செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவிடம் இருந்து எங்கள் நாடு எதையும் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்திலும் அமெரிக்காவுடன் அத்தகைய உடன்பாட்டை வடகொரியா செய்து கொள்ளாது என்று அந்த அறிக்கையில் வடகொரியா வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கிம் கி கிவான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பதில்: அமெரிக்க அதிபருடனான மாநாட்டை ரத்து செய்ய நேரிடும் என்று வடகொரியா எச்சரித்திருப்பது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை ஊடகத் துறை செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், “வடகொரியா என்ன தெரிவித்தது என்பது குறித்து அமெரிக்கா சுதந்திரமாக ஆலோசனை நடத்தும். இந்த விவகாரத்தில் கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும். எனினும், வடகொரியாவுடனான மாநாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்’ என்றார்.

Related posts: