சிரியாவில் அரசு முற்றுகையிட்ட பகுதிக்கு உதவிகள் விநியோகம்!

Saturday, February 17th, 2018

கிழக்கு கெளத்தா பிராந்தியத்திற்கு மூன்று மாதங்களில் முதல் முறை உதவிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்திற்கு உதவிகள் செல்லவும், சுகவீனமுற்ற நூற்றுக்கணக்கானவர்களை வெளியேற்றுவதற்கும் ஐ.நா கோரிக்கை விடுத்து பல வாரங்களின் பின்னரே உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

டமஸ்கஸின் கிழக்காக முற்றுகையின் கீழ் சுமார் 400,000 பேர் வாழும் இந்த பிராந்தியம் தொடர்ச்சியான பீரங்கி தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியை தீவிரப்படுத்தி இருக்கும் அரச படையின் தாக்குதல்களில் அண்மைய வாரங்களில் இங்கும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் 7,200 பேருக்கு போதுமான உணவுப் பொருட்கள் கடந்த புதன்கிழமை விநியோகிக்கப்பட்டதாக ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த உதவி விநியோகத்தில் பங்கேற்ற செம்பிறை சங்கம், 1,440 குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் ஒன்பது டிரக்குகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 10,000 சிகிச்சைகள் வழங்குவதற்கு போதுமான 1.8 தொன் மருத்துவ விநியோகங்கள் கொண்டுசெல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஒப்பீட்டளவில் குறைந்த அளவான விநியோகங்களே புதனன்று இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியாக இருக்கும் மூலோபாயம் மிக்க கிழக்கு கெளத்தா பிராந்தியம் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் அரச படையின் முற்றுகையில் உள்ளது.

Related posts: