வட கொரியாவுக்கு 8 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குகிறது தென்கொரியா!

Friday, September 22nd, 2017

வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்து வருகிறது. இதற்கு தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

மேலும், வடகொரியா அரசு மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ள நிலையிலும் இவற்றை பொருட்படுத்தாத வடகொரியா, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மனிதாபிமானத்தின் அடிப்படையில் வடகொரியாவுக்கு 8 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளதாக தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், உலக உணவு அமைப்பு மற்றும் யூனிசெப் அமைப்பின் பரிந்துரையின் பேரில் வடகொரியாவுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது வடகொரியாவுக்கு நிதி வழங்குவதற்கு கண்டனங்கள் எழுந்தன.

ஆனாலும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் வடகொரியாவுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் முடிவு செய்யப்பட்டது. சுமார் 8 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிதியில் 4.5 மில்லியன் டாலர் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதற்கும், 3.5 மில்லியன் டாலர் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

 

Related posts: