வட கொரியாவிலிருந்தே ரான்சம்வேர் இணைய தாக்குதல் தொடுக்கப்பட்டது!

Monday, June 19th, 2017

கடந்த மாதம் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மற்றும் உலகின் பிற அமைப்புகளின் இணையதளங்களை முடக்கிப் போட்ட இணையத் தாக்குதலின் பின்னணியில் வட கொரியாவைச் சேர்ந்த இணைய தாக்க ஊடுருவல்காரர்கள் இருந்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் தேசிய இணையப் பாதுகாப்பு மையம் இதுகுறித்த சர்வதேசப் புலன்விசாரணையை நடத்தியுள்ளது. லாசரஸ் (Lazarus) என்று அறியப்படும் இணைய ஊடுருவல் குழு இந்தத் தாக்குதலைத் தொடுத்தாக அந்த மையம் நம்புவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

அமெரிக்காவின் கணினி அவசர உதவிக் குழுவும் லாசரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தக் குழுதான் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது 2014 -ஆம் ஆண்டு இணைய தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. வட கொரிய அரசின் தலைமையை கேலி செய்யும் வகையில், சேத் ரோஜென் நடித்த `த இண்டர்வியு´ எனும் ஆங்கிலத் திரைப்படத்தை அந்நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டிருந்த சமயத்தில் அத்தாக்குதல் நடத்தப்பட்டது.  அதைத்தொடர்ந்து சிறிய காலதாமதத்துக்குப் பின்னர் அந்தப் படம், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் திரையிடப்பட்டது.

வங்கிகளில் இருந்து இணையம் மூலம் பணம் திருடப்பட்டதன் பின்னணியிலும் இந்தக் குழு இருப்பதாக நம்பப்படுகிறது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைகள் பாதிப்பு  கடந்த மே மாதம் வானாக்ரை என்ற பெயரில் உலகின் பல நாடுகளில் உள்ள கணிப்பொறிகளில் ஊடுருவி, அதிலுள்ள தகவல்களைக் கைப்பற்றி அவற்றை பயனாளிகளின் கட்டுப்பாட்டுக்கு மீண்டும் விடுவிக்க பிணைத்தொகை கோரியது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் தேசிய சுகாதார சேவையும் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இதுகுறித்த புலன் விசாரணையைத் தொடங்கிய பிரிட்டனின் தேசிய இணைய பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சமீப வாரங்களில் தங்கள் முடிவுகளை இறுதி செய்தனர்.

அந்தத் தீய மென்பொருளின் தாக்குதல் பிரிட்டன் அல்லது தேசிய சுகாதார சேவை ஆகியவற்றை இலக்கு வைத்துத் தாக்கவில்லை. எனினும் அந்தத் தாக்குதலை நிகழ்த்திய இணைய ஊடுருவிகளின் கட்டுப்பாட்டை மீறிப்போன பணம் பறிக்கும் திட்டமாக அது இருந்திருக்கலாம். குறிப்பாக, அவர்கள் இதுவரை பிணைத்தொகை எதையும் எடுத்துப் பயன்படுத்தியாகத் தெரியவில்லை.

Related posts: