வங்காள தேசத்தில் போர்க்குற்ற வழக்கில் எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டனை சுப்ரீம் கோர்ட்டு உறுதிசெய்தது
Wednesday, March 9th, 2016
வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்கில் எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான மிர் காசிம் அலிக்கு விதிக்கப்ட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.
வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவரும், தொழில் அதிபருமான மிர் காசிம் அலி (வயது 63) மீதும் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு, ஜூன் 17-ந் தேதி கைது செய்யப்பட்ட காசிம் அலி சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களை பிடித்து சித்ரவதை செய்வதற்கென்றே ஒரு பிரிவை வைத்திருந்ததாகவும், ஒரு இளம் சுதந்திரப் போராட்ட வீரரை கடத்திச்சென்று கொலை செய்து உடலை ஆற்றில் வீசி விட்டதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கு 2014-ம் ஆண்டு, நவம்பர் 2-ந் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் தரப்பில் வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்கா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று (08) மிர் காசிம் அலிக்கு, தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தும், மேல்-முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
‘தீர்ப்பின் நகல் கைக்கு கிடைத்தவுடன், காசிமையும், அவரது குடும்பத்தினரையும் கலந்து ஆலோசிப்பேன்’ என்று மிர் காசிம் அலியின் வக்கீல் காந்த்கர் மகபூப் கூறிஉள்ளார். இந்த தண்டனைக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம். கருணை வழங்கப்படாத நிலையில் அவர் தூக்கிலிடப்படுவார்.
வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் நடந்தது. அப்போது ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட சிலர் சுதந்திர போராட்டத்துக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். அப்போது போர்க்குற்றங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறின. 30 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
தீர்ப்பாயம் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக டாக்காவில் 2010-ம் ஆண்டு குற்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி, 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர்கள் 3 பேர் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் 4 பேர் தூக்கில் போடப்பட்டனர்
Related posts:
|
|
|


