சிரியாவில் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும்’: ரஷ்யா திடீர் அறிவிப்பு

Wednesday, March 16th, 2016

சிரியாவில் உள்ள ரஷ்ய ராணுவம் அந்நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் ‘சிரியாவில் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும்’ என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் முதல் நாளான நேற்று ‘சிரியாவில் இருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக’ ரஷ்ய ஜனாதிபதியான புடின் அறிவித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு முன்னர் சிரியாவில் உள்ள ரஷ்ய நாட்டு போர் விமானங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவை நோக்கி புறப்பட்டன.

இந்நிலையில், சற்று முன்னர் வெளியான தகவலில் ‘சிரியாவில் ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும்’ என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சரான Nikolay Pankov என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘சிரியாவில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பலனுள்ள தீர்வுகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், தீவிரவாதத்தை முழுமையாக ஒடுக்கி விட்டதாக கருத முடியாது. எனவே, சிரியாவில் ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

இதற்காக ரஷ்ய நாட்டை சேர்ந்த 2 பாட்டாளியன் படை மற்றும் 800 ராணுவ வீரர்கள் சிரியாவிலேயே நீடித்து இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக’ அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டு ராணுவம் சிரியாவை விட்டு வெளியேறி வரும் சூழலில் திடீரென இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: