யேமனில் கொடூரத் தாக்குதல் : 35 பேர் பரிதாபமாகப் பலி..!

Thursday, August 24th, 2017

 

யேமனின் சனா நகரில் உள்ள ஹவுத்தி சோதனைச்சாவடிக்கு அருகில் இன்று நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 35 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யேமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் புரட்சிப் படையினருக்கும் நடந்து வரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள யேமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சனா நகரின் எல்லைப்பகுதியில் ஹவுத்தி அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகில் உள்ள ஹோட்டலில் இன்று, விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாக கூறப்பட்டதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விமான தாக்குதலில் பலியான 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு முன் அப்பகுதியில் சவுதி கூட்டுப்படை தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. அமெரிக்க படையினரும் இப்பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் இந்த முறை யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை கண்டறிவதில் குழப்பம் நீடிக்கிறது.

 

Related posts: