யெமன் ராடார் தளங்கள் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

Friday, October 14th, 2016

செங்கடலில் இருக்கும் அமெரிக்க போர் கப்பல் ஒன்று சில தினங்களுக்குள் இரண்டாவது முறையாகவும் ஏவுணை தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து யெமனின் ராடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் தளங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது.கடந்த 2015 மார்ச் மாதம் யெமன் மோதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கிளர்ச்சியாளர் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இது முதல் முறையாகும்.

அண்மைய ஏவுகணை தாக்குதல்களுடன் தொடர்புபட்டது என கண்டறியப்பட்ட மூன்று ராடார் தளங்களே தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்ததாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

யு.எஸ்.எஸ் நிட்சே தாக்குதல் கப்பலில் இருந்து டொம்ஹொக் க்ரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

“முக்கியமான கடல்வழி பாதையில் பயணிக்கும் எமது சுதந்திரம், எமது பணியாளர்கள் மற்றும் எமது கப்பல்களை பாதுகாக்கும் தற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று பென்டகன் பேச்சாளர் பீட்டர் குக் குறிப்பிட்டுள்ளார்.“எமது வர்த்தக பாதை மற்றும் கப்பல்கள் மீது மேலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அமெரிக்கா முறைப்படி பதிலடி கொடுக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

யெமனுக்கு அப்பால் செங்கடலில் நிலைகொண்டிருக்கும் யு.எஸ்.எஸ் மேசன் போர் கப்பல் மீது எறியப்பட்ட ஏவுகணை ஒன்று ஏவுகணை அழிப்பு முறை மூலம் முறியடிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே நேற்று முன்தினம் யெமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பலின் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பென்டகன் குறிப்பிட்டது.எனினும் அதே கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு யெமன் பகுதியில் இருந்து இரு ஏவுகணைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் யு.எஸ்.எஸ் மேசன் கப்பல் மீது இரு ஏவுகணைகளை ஏவி இருந்தது.

எனினும் அவை இரண்டும் கப்பலை அடைவதற்கு முன்னர் நீரில் விழுந்ததாக பென்டகன் குறிப்பிட்டது.எனினும் தாம் எந்த ஒரு போர் கப்பலையும் இலக்குவைக்கவில்லை என்று ஹூத்தி பேச்சாளர் ஒருவர் அப்போது விளக்கம் அளித்திருந்தார்.

ஹூத்தி கிளர்ச்சியாளர் மீது சவூதி அரேபியா தலைமையிலான பல நாடுகளைக் கொண்ட கூட்டுப் படை நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

எனினும் இம்மாத ஆரம்பத்தில் தலைநகர் சானாவில் இறுதிச் சடங்கு நிகழ்வொன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து சவூதி கூட்டுப்படைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சவூதி கூட்டுப்படைக்கு ஆதரவளிப்பதை மீளாய்வு செய்யப்போவதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.

எனினும் இறுதுச் சடங்கு மீதான தாக்குதலை பொறுப்பேற்க மறுத்திருக்கும் சவூதி அது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டது. தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக சவூதி குறிப்பிட்டிருந்தது. யெமனில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் சவூதி கூட்டுப்படை தலையிட்டது தொடக்கம் அங்கு குறைந்தது 4,125 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 7,207 பேர் காயமடைந்திருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

 coltkn-10-14-fr-03172528869_4883293_13102016_mss_cmy

Related posts: