மெக்சிகோ நிலநடுக்கம்:  வெளியேறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

Saturday, September 9th, 2017

மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 60 பேர் கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மெக்சிகோ நாட்டில் தென்கடலோர பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்பாக பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 புள்ளிகளாக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியது.

இந்த நில நடுக்கம், சியாபாஸ் மாகாணத்தில் பிஜிஜியாபான் நகரில் இருந்து 100 மைல்கள் தொலைவில், பசிபிக் பகுதியில் 43 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.இந்த நில நடுக்கம், மெக்சிகோ சிட்டியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மெக்சிகோ நகர விமான நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தலைநகரையொட்டிய பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கின.தூங்கிக்கொண்டிருந்த மக்கள் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து அலறியடித்தவாறு எழுந்து, வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் வந்து தஞ்சம் புகுந்தனர்.

சியாபாஸ் பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நில நடுக்கத்தால் மொத்தம் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சியாபாஸ் மாகாண ஆளுநர் மேனுவல் வெலாஸ்கோ தெரிவித்துள்ளார்.இந்த நில நடுக்கம் காரணமாக மெக்சிகோ, கவுதமாலா, எல் சல்வடார், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நில நடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து ஆயிரம் கி.மீ. தொலைவுவரை நில நடுக்கத்தின் அதிர்வுகள் இருந்தன என தகவல் வெளியாகியுள்ளது.மெக்சிகோ உள்துறை அமைச்சகம், கடைசியாக வெளியிட்ட அறிக்கையில், நில நடுக்கம் 8.4 புள்ளிகள் அளவிலானது, நாடு இதுவரை இந்தளவுக்கு கடுமையான நில நடுக்கத்தை சந்தித்தது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.மெக்சிகோவில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் எழுந்தன. அதே நேரத்தில் சுனாமி அலைகள் கவலைப்படத்தக்க அளவில் இல்லை என்று ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ தெரிவித்துள்ளார்.மெக்சிகோ நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டுக்கு பின்னர் இப்படி ஒரு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது

Related posts: