மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

Tuesday, June 1st, 2021

சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகளைப் பெற அனுமதித்து சீனா தனது குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, ‘தம்பதிக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது.

இது உலகெங்கிலும் உள்ள கடுமையான குடும்பக் கட்டுப்பாடு விதிமுறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

எனினும், வயதான தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத் தேக்க நிலை குறித்த அச்சம் காரணமாக கடந்த 2016இல் இரண்டு குழந்தைக் கொள்கையை சீனா அறிவித்தது.

இந்நிலையில், தம்பதியினருக்கு குழந்தைகளைப் பெற ஊக்குவிப்பதற்கான அரசாங்க முயற்சிகள் இருந்தும்கூட, 2020ஆம் ஆண்டில் சீனாவின் வருடாந்த பிறப்புகள் தொடர்ந்து 12 மில்லியனாகக் குறைந்து வருவதாக தேசிய புள்ளிவிவரப் பணியகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இதன்படி, 2050இற்குள் நூற்றுக்கணக்கான மில்லியன் முதியவர்களைப் பராமரிக்க வேண்டிய நிலை வரும் எனவும் பொருளாதாரத்தை இயக்க இளம் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதையும் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஜனாதிபதி ஷி ஜின்பிங் பங்குபற்றிய சீனாவின் உயரடுக்கு பொலிட்பீரோ தலைமைக் குழுவின் இன்றைய கூட்டத்தின் பின்னர், நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் அறிக்கையில், 2020ஆம் ஆண்டுடன் முடிவடைந்த ஒரு தசாப்தத்தில் சீன மக்கள் தொகை மெதுவான விகிதத்திலேயே வளர்ச்சியடைவதைக் காட்டுகிறது.

அதாவது, 1960-களின் பின்னர் சீனாவின் மக்கள் தொகை மிக மெதுவான விகிதத்தில் வளர்ந்து 1.41 பில்லியனை எட்டியது என்பதைக் காட்டுகிறது.

இது உழைக்கும் வயது மக்களின் எண்ணிக்கையில் ஒரு பெரும் வீழ்ச்சியைக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: