மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம்!

Friday, February 21st, 2020

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர்.

மேலும், வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீதும் ரஷ்யா உதவியுடன் சிரியா இராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.

இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளையும் குவித்துவைத்துள்ளது.

உள்நாட்டில் தொடங்கிய இப்போர் தற்போது இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ள துருக்கி – சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் இந்த நடவடிக்கையால் ரஷியா மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதற்கிடையில் வடக்கு சிரியாவின் அலிப்போ மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம் போராளிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக 2012 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. மேலும், அந்த விமான நிலையமும் முற்றிலும் செயல்பாடுகள் அற்று மூடப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரஷ்யா உதவியுடன் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்டுவரும் சிரிய அரசு சமீபத்தில் அலிப்போ மாகாணம் முழுவதையும் கைப்பற்றியது.

இதை அடுத்து, அங்கு 8 ஆண்டுகள் செயல்பாடுகள் இல்லாமல் மூடப்பட்டிருந்த அலிப்போ சர்வதேச விமான நிலையம் கடந்த திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.

8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பயணிகள் விமானம் ஒன்று தலைநகர் டமாஸ்கசில் இருந்து அலிப்போ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் பொதுமக்கள், சர்வதேச ஊடகவியளாலர்கள் உள்பட பலர் பயணம் செய்தனர்.

Related posts: