மாயமான இந்திய விமானத்தில் பயணம் செய்தவரின் செல்போன் இயங்குவதாக தகவல்!

Sunday, July 31st, 2016

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. அது, வங்கக் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனால் மாயமான விமானத்தை தேடும்பணியில் போர்க்கப்பல்கள், போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. 9-வது நாளாக நேற்றும் தேடும் பணி தொடர்ந்தது.

இதுகுறித்து இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கூறியதாவது:-

முன்னேற்றம் இல்லை சென்னை துறைமுகத்தில் இருந்து வங்க கடலில் 150 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள சுற்றுப்பகுதியில் விமானம் விழுந்ததாக கருதப்படுகிறது. அந்தப்பகுதியில் கடலின் மேற்பரப்பில் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனினும், இதில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

கடலின் மேற்பரப்பில் விமானத்தின் பாகங்கள் கிடைக்காததால், ஐ.என்.எஸ். நிருபக் என்ற நீர்முழ்கி கப்பல் மூலம் ஆழ்கடலிலும் தேடும் பணி நடந்து வருகிறது. அதேபோல் ஐ.என்.எஸ்.சிந்து துர்க் கப்பலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

சாகர்நிதி கப்பல் தொடர்ந்து தேடுதல் பணிக்காக மொரிஷியஸ் நாட்டில் இருந்து தேசிய கடலாய்வு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு சொந்தமான சாகர்நிதி என்ற அதிநவீன கருவிகள் கொண்ட ஆய்வு கப்பல் அழைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கப்பல் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வந்துவிடும். பின்னர் இந்த கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படும். இதில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காட்டுப்பகுதிக்குள் விமானம் போன்ற ஒரு பெரிய பொருள் பலத்த சத்தத்துடன் நொறுங்கி விழுந்ததை அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் பார்த்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தேடும்பணிக்காக விமானப்படையை சேர்ந்த 6 பேர் அங்கு விரைந்தனர். அவர்களும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செல்போன் இயங்குகிறது? விமானத்தில் இருந்த விமானப்படை அதிகாரியான ரகுவீர் வர்மாவின் குடும்பத்தினர், ரகுவீரின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தபோது ‘ரிங்’ செல்வதாகவும், ஆனால் மறுமுனையில் யாரும் போனை ‘ஆன்’ செய்து பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். தவிர, விமானம் காணாமல் போய் 4 நாட்களுக்கு பின்பு ரகுவீரின் செல்போன் தகவல்கள் படிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். இந்த தகவல் விமானத்தை தேடும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ரகுவீர் குடும்பத்தினர் கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் செல்போன் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.3,400 மீட்டர் ஆழம்இதற்கிடையே, சேலம் அரசு பொறியியல் கல்லூரியின்ஆராய்ச்சி ஆலோசகரும், பேராசிரியருமான விஞ்ஞானி டி.ஜெயபிரபு கடல்சார் ஆராய்ச்சி மூலம் கிடைத்த தகவலை கடலோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒரு அறிக்கையாக தாக்கல் செய்தார்.

அதில், மாயமான விமானம் சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 150 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருந்து தெற்கே 20 முதல் 40 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கட்டுப்பாடின்றி சென்று இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், சுமார் 3,250 முதல் 3,400 மீட்டர் ஆழத்தில் களிமண் நிறைந்த கடல் பகுதியில் விழுந்து விமானம் நொறுங்கி இருக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாகவும் ஆய்வு செய்து வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: