மலேசிய விமானம்! ஏலியன்களால் கடத்தப்பட்டதா ?

Sunday, March 6th, 2016
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்எச் 370 போயிங் ரக விமானம் மாயமானது. விமானம் புறப்பட்டுச்சென்ற சற்று நேரத்தில் தரைக்கட்டுப்பாடு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. மாயமான விமானத்தை தேடும் பணியில் மலேசிய அரசு தீவிரமாக ஈடுபட்டது.

பல்வேறு தகவல்கள் கூறப்பட்டாலும், விமானம் குறித்த எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் விமானம் கடலில் மூழ்கிவிட்டதாகவும் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாகவும் மலேசிய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்கின்றது.

மாயமான விமானம் அன்டார்டிகா பனிப்பிரதேசத்தை நோக்கி இயக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த ஒருவரால் விமானம் கடத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது.

அமெரிக்கா, தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டுப்போர் பயிற்சியின்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும், தனது விமான படைத்தளமான டிகோ கார்சியாவில் கட்டாயப்படுத்தி விமானத்தை அமெரிக்கா தரையிறக்கியதாகவும் தகவல் வெளியானது.

விமானத்தின் உடைந்த பாகம் ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் எந்த தகவலும் கடைசி வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவின் ஆணையர் மார்டின் டோலன் கூறியதாவது: உண்மையை கண்டுபிடிப்பது மிக முக்கியமான விஷயமாகும். மேலும் அனைவராலும் அறியப்பட்ட ஒரு சம்பவம். இதில் மிகப்பெரிய மர்மம் நீடிக்கிறது. விமானம் குறித்த தகவலை கண்டுபிடிப்பதற்காக அதிக அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாங்கள் என்னதான் சொன்னாலும், செய்தாலும், சரியாக புரிந்துகொள்ளாமல் பொதுமக்கள் அதனை திரித்துக்கூறிவிடுகின்றனர் என்றார். இதனிடையே விமானத்தை ஏலியன்கள் கடத்தி சென்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

நாளை மறுநாளுடன் மலேசியா விமானம் மாயமாகி 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் விமானம் குறித்த எந்த தகவலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் மர்மமே நீடித்து வருகிறது.

Related posts: