மலேசியாவில் சபாநாயகராக தமிழ்ப்பெண்!

Monday, August 15th, 2016

மலேசியாவில் உள்ள பேராக்கின் சட்டமன்ற சபாநாயகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் தங்கேஸ்வரி பதவியேற்றுள்ளார்.

மலேசிய இந்தியர்களின் முதலாவது, ‘பெண் சபாநாயகர்’ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த தங்கேஸ்வரி, பின்னர் சட்டப்படிப்பை முடித்து சட்டத்தரணியானார்.

1976ஆம் ஆண்டில் அவர் மலேசிய இந்திய காங்கிரஸில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்தார். பேராக் மாநில மகளிர் அணித் தலைவியாகவும் தேசிய அளவில் துணைத் தலைவியாகவும் கட்சியில் பொறுப்புகளை வகித்தார். தற்போது கட்சியின் ஈப்போ தாமான் வாக்கியோங் கிளையில் மகளிர் அணித் தலைவியாக இருந்து வருகிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் கட்சி அவரை ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. ஆனால், அந்த தேர்தலில் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த கேசவனிடம் அவர் தோல்வி கண்டார். இந்தப்பொறுப்பில் இருந்துவந்த எஸ்.கே. தேவமணி பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய நியமனம் இடம்பெறுகிறது.

9ஆம் தேதி பேராக் சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் சட்டமன்ற அவைத்தலைவருக்கான தேர்தலில் அவரை எதிர்த்து சேர்ந்த சிவக்குமார் போட்டியிட்டார்.

சிவக்குமாருக்கு 24 வாக்குகளும், தங்கேஸ்வரிக்கு 30 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து 6 வாக்குகள் பெரும்பான்மையில் தங்கேஸ்வரி அதிகாரபூர்வமாக பேராக் சட்டமன்ற அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் பேராக் மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை தங்கேஸ்வரி பெறுகிறார். தனது வெற்றி குறித்து ”என் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமது பணியைச் செவ்வனே செய்யப் போகிறேன்.

இது இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய அங்கீகாரம். மகளிருக்குத் தரப்பட்ட அங்கீகாரம்” என தங்கேஸ்வரி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: