போருக்கு தயார் : அமெரிக்காவுக்கு சவால் விடுத்த வடகொரியா!

Thursday, April 13th, 2017

அமெரிக்கா விரும்பும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடற்படை குழுவொன்றை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்த அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால், வடகொரியா அணுவாயுத தாக்குதல்களை நடத்த நேரிடும்.

எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்கொள்ள வடகொரியா தயார் நிலையில் உள்ளது. அத்துடன், எதிரியின் நடமாட்டங்களை தொடர்ச்சியாக வடகொரியா கண்காணித்து வருகின்றது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலுடன் கார்ல் வின்ஸன் தாக்குதல் குழுவை அமெரிக்கா கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டித்து வடகொரியா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, அமெரிக்காவுக்கும் தமக்கும் இடையிலான சிரியா தொடர்பிலான இராணுவத் தொடர்பை துண்டித்துக்கொள்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரியா மீதான அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்காவுடன் நேரடி மோதலுக்கு தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தமது தொடர்பு சீரடையும் என்பதில் நம்பிக்கையில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் சிரியா தொடர்பில் “குறுக்கிடாத வழித்தடங்கள்” (Deconfliction channels) என்ற ஒரு நடைமுறை 2015ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகின்றது.

கணிசமான இடைவெளி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது. சிரியாவில் இரு வல்லரசுகளும் மேற்கொள்ளும் விமான தாக்குதல்கள் தங்களுக்கிடையே நேரடி மோதலாக உருவாகிவிடக் கூடாது என்பதே இந்த ஏற்பாட்டிற்கு முக்கிய காரணம்.

இக் காரணங்களின் அடிப்படையிலேயே ரஷ்ய ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார். இந்நிலையில், சிரிய வான் பரப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் நெருங்கி வரக்கூடும் எனவும், இதனால் விபத்துக்கள் ஏற்பட கூடும் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: