பிரித்தானிய வாக்கெடுப்பில் வெளியேறவேண்டும் தரப்பு முன்னிலை!

Friday, June 24th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரித்தானியா இருக்கவேண்டுமா , வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரித்தானிய மக்களின் கருத்தறிய நேற்று வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி , வெளியேற வேண்டும் என்ற தரப்பு குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் இன்னும் பெருமளவு வாக்குகள் எண்ண வேண்டியிருக்கும் நிலையில், போட்டி கடுமையாக இருப்பதாகவே தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் , பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற தரப்புக்கு சுமார் 53 லட்சம் வாக்குகளும், ஒன்றியத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற தரப்புக்கு சுமார் 51 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன.

வெளியேறவேண்டும் என்ற தரப்புக்கு இது வரை 50.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் , தொடரவேண்டும் என்ற தரப்பு பின்னிலையிலிருந்து சற்று முன்னேறி வரத் தொடங்கியிருக்கிறது.

வடகிழக்கு இங்கிலாந்தும், வேல்ஸும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற தரப்புக்கு ஆதரவாக வாக்களத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. அந்தப் பகுதிகளில் பொதுத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும் , பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கவேண்டும் என்ற தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஆனால் லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் இன்னும் பல லட்சக்கணக்கான வாக்குகள் எண்ணப்படவேண்டியுள்ளன.

வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில் வெளியான சில கருத்துக் கணிப்புகள் , தொடரவேண்டும் என்ற தரப்பு வெல்லக்கூடும் என்று சுட்டிக்காட்டியதை அடுத்து பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு உயர்ந்து பின்னர் மீண்டும் சரிந்தது. பொதுதேர்தலில் ஒவ்வொரு தொகுதி முடிவுகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்த கருத்தறியும் வாக்குப் பதிவில், மொத்த வாக்குகளில் பெரும்பான்மையே முடிவை நிர்ணயிக்கும்.

மொத்தம் 382 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. தேர்தல் வல்லுநர் பேராசிரியர் ஜான் கர்டிஸ் இந்த ஆரம்ப கட்டத்தில் வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, வெளியேறவேண்டும் என்ற தரப்பு வெல்லக்கூடும் என்று கூறுகிறார்.

எந்த ஒரு தரப்பும் வெற்றி பெற 1.68 கோடி வாக்குகள் தேவைப்படும் என்று அவர் கணிக்கிறார்

Related posts: