அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியில் வெட்டு!

Saturday, August 4th, 2018

அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு போரில், அந்த நாட்டின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதன் காரணமாக பயங்கரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது.

முந்தைய ஒபாமா ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானுக்கு, பாகிஸ்தானுடனான மேம்படுத்தப்பட்ட கூட்டு சட்டம் 2009-ன் படி (கெர்ரி-லுகார்- பெர்மன் சட்டம்) அமெரிக்கா ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,160 கோடி) நிதி உதவி அளித்து வந்தது.

ஆனால் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி டிரம்ப், ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு, பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் முக்கிய மாற்றம் வந்தது.

பயங்கரவாத ஒழிப்புக்காக அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் நிதி உதவி பெற்றுக்கொண்டு, தன் சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

பாகிஸ்தான் தன் நாட்டில் உள்ள ஹக்கானி வலைச்சமூகம், தலீபான் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள்மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. ஆனால் பாகிஸ்தான் அதை காதில் போட்டுக்கொள்ளவும் இல்லை. குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை.

இதன் காரணமாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு நிதி உதவி 1.15 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7,820 கோடி) அமெரிக்கா நிறுத்தி வைத்தது.அது மட்டுமின்றி பாகிஸ்தானுடனான சீனாவின் தொடர்புக்கு எதிராகவும் அமெரிக்கா குரல் கொடுத்து வந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு செலவுகளை ஈடுசெய்து வழங்குகிற நிதியை வெறும் 150 மில்லியன் டாலராக (சுமார் ரூ.1,020 கோடி) குறைத்து, அதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நிறைவேறியது.

இந்த வகையில் 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,760 கோடி) நிதி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கான நிதியை அமெரிக்கா வெகுவாக குறைத்து இருப்பது, அந்த நாட்டுக்கு பெருத்த இழப்பாகும்.

அதே நேரத்தில் கடந்த காலத்தில் ஹக்கானி வலைச்சமூகம், லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விதித்து வந்த நிபந்தனைகளை இனி விதிக்காது.

இருப்பினும் அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியில் வெட்டு விழுந்து இருப்பது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை தந்து உள்ளது.

Related posts: