பிரச்சினை நிலவும் பகுதியில் சீனாவின் கடலோர காவல்படைப் படகுகள் மிதக்கும் அரணை அமைத்துள்ளது – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

Monday, September 25th, 2023

தென்சீனக் கடலில் பல நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை நிலவும் பகுதியில் சீனாவின் கடலோர காவல்படைப் படகுகள் மிதக்கும் அரணை அமைத்து இருப்பதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் மீனவர்கள், அந்தக்கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்க முடியாமல் அந்த அரண் அவர்களைத் தடுக்கிறது என்றும் கூறியுள்ளது.

ஸ்கார்பனோ ஷோல் என்ற பாறைத் திட்டு அமைந்துள்ள பகுதியில் சீனா அந்த அரணை அமைத்துள்ளது என்றும் அதை பிலிப்பீன்சின் கடலோரக் காவல்படையும் மீன்வளம், கடல்வளத் துறையும் கடுமையாகக் கண்டிப்பதாகவும் ஜே டெர்ரிலா என்ற கடலோரக் காவல்படையின் பேச்சாளர் ‘எக்ஸ்’ தளத்தில் கூறியுள்ளார்.

அந்தத் தடை காரணமாக பிலிப்பீன்ஸ் மீனவர்கள் அந்தப் பகுதியில் மீன் பிடிக்க முடியவில்லை. அவர்களின் வாழ்வாதாரமே சிரமமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ள அனைத்து அரசாங்க அமைப்புகளோடும் கலந்துபேசி அணுக்கமாகச் செயல்பட்டு இந்தச் சவால்களைப் பிலிப்பீன்ஸ் சமாளிக்கும். தனது கடல்துறை உரிமையை அது நிலைநாட்டும்.

கடல்பகுதியில் தனக்கு உள்ள அதிகாரத்தை பிலிப்பீன்ஸ் பாதுகாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, இது பற்றிக் கேட்டபோது மளிலாவில் உள்ள சீனத் தூதரகம் கருத்து சொல்ல மறுத்துவிட்டது.

வியட்னாம், மலேசியா, புருணை, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் நாடுகளின் பொருளியல் மண்டலங்களை உள்ளடக்கி இருக்கும் தென்சீனக் கடலில் 90% பகுதியை சீனா தன்னுடைய பகுதி என்று கூறுகிறது.

ஸ்கார்பனோ ஷோல் என்ற திட்டுப் பகுதியை சீனா 2012 இல் கைப்பற்றிக்கொண்டது. பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அந்தப் பாறை திட்டுப் பகுதிக்கும் அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிலிப்பீன்சை முன்பு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே ஆண்டபோது சீனாவுடன் அதன் உறவு நல்ல நிலையில் இருந்தது. அதனால் பிலிப்பீன்ஸ் மீனவர்களை சீனா ஸ்கார்பனோ ஷோல் பகுதிக்கு அனுமதித்தது.

ஆனால் பிலிப்பீன்சில் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜுனியர் சென்ற ஆண்டு பதவி ஏற்றதும் மீண்டும் பதற்றம் கூடிவிட்டது. அந்தக் கடல் பகுதியில் சீனா அமைத்துள்ள மிதவை அரண் 300 மீட்டர் நீளத்திற்கு உள்ளது.

பிலிப்பின்சின் கடலோரக் காவல் படையினரும் மீன்வளத்துறை அதிகாரிகளும் வழக்கமான சுற்றுக்காவலில் ஈடுபட்டு இருந்தபோது அந்த மிதக்கும் அரணைக் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: