பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம்!

Thursday, December 27th, 2018

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, ரஷியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், அண்டை நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, ரஷியா ஆகிய 4 நாடுகளுக்குக் கடந்த 24-ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷா முகமது குரேஷி, நேற்று ரஷியா சென்றடைந்தார் என்றனர்.

இந்நிலையில், ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை குரேஷி சந்தித்துப் பேசினார். இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இரு நாட்டு நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கிலும், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தை, ரஷியா தலைமையில் கடந்த மாதம் நடைபெற்றது. அதில், ஆப்கானிஸ்தான் அரசு தரப்பு அதிகாரிகள், தலிபான் இயக்கத்தின் பிரதிநிதிகள், உலக நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் நாட்டின் உயரதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குரேஷி, அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும், உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானியை அவர் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை செவ்வாய்க்கிழமை அவர் சந்தித்துப் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தலிபான்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து அவர்களிடம் குரேஷி ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: