பாகிஸ்தான் அதிபராக ஆரிஃப் அல்வி !

Wednesday, September 5th, 2018

பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது:

பாகிஸ்தானின் 13-ஆவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் மெளலானா பாஸில் உர் ரெஹ்மான் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அய்ஸாஸ் ஆஷன் ஆகியோருக்கிடையிலான மும்முனைப் போட்டி நடைபெற்றது.

இதில் ஆரிஃப் அல்வி வெற்றியடைந்தார். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பதிவான 430 வாக்குகளில் அல்விக்கு 212 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரெஹ்மானுக்கு 131 வாக்குகளும் ஆஷனுக்கு 81 வாக்குகளும் கிடைத்தன. 6 வாக்குககள் நிராகரிக்கப்பட்டன என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றிய ஆரிஃப் அல்வி கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் சார்பில் போட்டியிடும் ஆரிஃப் அல்வி வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related posts: