பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை விவாதிக்க பாரிசில் அனைத்துலக காஸா மாநாடு – நவம்பர் 9 நடத்த பிரான்ஸ் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு!

Sunday, November 5th, 2023

பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை விவாதிக்க தலைநகர் பாரிசில் அனைத்துலக காஸா மாநாடு ஒன்றுக்கு அடுத்த வாரம் நவம்பர் 9 ஆம் திகதி பிரான்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.

போரால் முழுதும் முற்றுகையிடப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு உதவிகளை எப்படி அனுப்பிவைப்பது என்பது மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று அரசதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மாநாட்டின் ஏற்பாட்டை செய்தியாளர்களிடம் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன், பிரான்சின் வடமேற்கு நகரான பிரட்டெனியில் உறுதிசெய்தார்.

கடந்த ஒக்டொபர் 7இல் ஏற்றுக்கொள்ளமுடியாத தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான இஸ்ரேலுக்கு தமது ஆதரவை பிரான்ஸ் தெரிவித்திருந்தது.

இருப்பினும் பதிலுக்கு இஸ்ரேல் காஸாவில் நடத்திவரும் எதிர் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, உணவு, உறக்கம் இன்றி பரிதவிக்கின்றனர்.

அந்த மாநாட்டில் அரசாங்கத் தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள் என முக்கிய உயரதிகாரிகள் கலந்துகொள்வர்.

மத்திய கிழக்கில் போர் நடந்துவரும் பகுதியில் உள்ள வட்டார நாடுகளான எகிப்து, ஜோர்டன், ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜி20 அமைப்பை உள்ளடக்கிய நாடுகள் ஆகியவை அழைக்கப்படவுள்ளன. ரஷ்யாவுக்கு அழைப்பு இல்லை.

அனைத்துலக அமைப்புகளான ஐக்கிய நாட்டு நிறுவனம், அரபு லீக் கூட்டமைப்பு, காஸாவில் இயங்கிவரும் அரசாங்க சார்பற்ற சுய உதவி அமைப்புகள் ஆகியவை மாநாட்டில் கலந்துகொள்ளும் என்று அரசதந்திரிகள் கூறினர்.

பலஸ்தீன அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும். ஆனால், இஸ்ரேலுக்கு அழைப்பு விடுக்கப்படமாட்டாது. இருப்பினும் மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இஸ்ரேலுக்கு தெரிவிக்கப்படும் என்று அரசதந்திர அதிகாரிகள் கூறினர்.

மாநாட்டில் ஐக்கிய நாட்டு நிறுவனம் அடையாளம் காட்டும் உடனடி உதவிகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கை முக்கிய இடம்பெறும்.

உடனடி உதவிகள் ஹமாஸ் அமைப்பிடம் சென்றடைந்துவிடாமல் காஸாவுக்குள் நுழையக்கூடிய பாதைகள், தண்ணீர், எண்ணெய், மின்சாரம் விநியோகம் ஆகியவை பற்றி ஆராயப்படும்.

அனைத்துலக ரீதியில் மனிதாபிமான சட்டத்தை மதித்து, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உதவிகளை பரிசீலிக்கவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் மாநாடு உதவும்.

கடல் வழியாக காஸாவுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும் திட்டங்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட பிரான்ஸ் ஹெலிகாப்டர்களை ஏந்திச் செல்லும் இரண்டு கப்பல்களை காஸா கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: