பன்றிக் காய்ச்சல் : சீனாவில் 38,000 பன்றிகள் கொன்று குவிப்பு!

சீனாவில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் பயம் காரணமாக 38,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டன. இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
சீனாவின் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பன்றி காய்ச்சல் ஐந்து மாகாணங்களில் வேகமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எனப்படும் இதன் முதல் பாதிப்பு லியோனிங் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. பின்னர் அது படிப்படியாக தெற்கு பகுதிகளுக்கும் பரவியது. தற்போதைய நிலையில், 1,000 கி.மீ. வரையில் அதன் பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதற்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளே முக்கிய காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, காய்ச்சலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 38,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுகாதாரத் துறையினரால் அழிக்கப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என வேளாண் அமைச்சக செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி ஜின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
உலகளவில் பன்றிகள் வளர்ப்பில் பாதி பங்களிப்பை சீனா மட்டுமே வழங்கி வருகிறது. ஏனெனில் அங்கு தனிநபர் பன்றி இறைச்சி நுகர்வு அதிகம் என ஐ.நா.வின் எஃப்.ஏ.ஓ. அமைப்பு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|