கச்சதீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவில்லை – விகாஸ் ஸ்வரூப்

Friday, May 27th, 2016

கச்சதீவில் இலங்கை கடற்படை கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

இது தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்பு ஊடகங்களில் வெளியான செய்தியில், கச்சதீவில் புதிய தேவாலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அந்தத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படை கண்காணிப்பு கோபுரம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கச்சதீவிற்குள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மீனவர்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, கொழும்பில் உள்ள இந்திய தூதர் வை.கே. சின்ஹாவிடம் இந்திய வெளியுறவுத் துறை கடந்த வாரம் அறிக்கை கேட்டிருந்தது.

இற்நிலையில், இந்திய தூதர் அளித்த அறிக்கை குறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விகாஸ் ஸ்வரூப்பிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் 1905ம் ஆண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்தத் தேவாலயம் பாழடைந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் அங்கு பெப்ரவரியில் திருவிழா நடத்தப்படுகிறது.

அதையொட்டி தேவாலயமும் அவ்வப்போது சீரமைக்கப்படும். கடந்த பெப்ரவரி 22ம் தேதி நடைபெற்ற கச்சதீவு திருவிழாவின் போது யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தற்போதுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் புதிய தேவாலயம் கட்டப்படுகிறது.

இந்த கட்டுமானப் பணியை இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஏற்கெனவே உள்ள பழைய தேவாலயத்தை சீர்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. கச்சதீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து யாத்திரிகர்கள், குறிப்பாக இந்திய மீனவர்கள் ஆண்டுதோறும் பங்கேற்பர். கடந்த ஆண்டு 4,003 பேரும், இந்தஆண்டு ஊடகவியலாளர்கள் 26 பேர் உள்பட 3,248 பேரும் பங்கேற்றனர்.

கச்சதீவில் கண்காணிப்பு கோபுரம் போன்ற கடற்படைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது என்றார் விகாஸ் ஸ்வரூப்.

(நன்றி தினமணி)

Related posts: