சுன்னாகம் கழிவு எண்ணெய் வழக்கு ஒத்தி வைப்பு!

Saturday, August 13th, 2016

சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கட்டளைக்காக நேற்று தவணையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கட்டளையின் பிரதிகள் மன்றில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீர் மாசு தொடர்பான வழக்கில் கழிவு எண்ணெய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 04 ஆம் திகதி வியாழக்கிழமை மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்தில் ஆஜரான யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரி, குறித்த பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டும். எனினும் அதற்கான நிதி போதுமானதாக இல்லை. எனவே, இதற்கான நிதி வளத்தைப் பெற்றுக் கொடுக்க நீதிமன்றம் வடமாகாண சபையிடம் கோர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், வலிவடக்கில் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிணறுகளிலுள்ள நீரை மக்கள் குடிக்கலாமா? குடிக்க முடியாதா? என்பது தொடர்பாகவும், அவற்றில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா? என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வள சபையைக் கோரிய நீதவான் சுன்னாகம் பகுதிகளிலுள்ள 150 கிணறுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்து முடிவை வெளியிடுமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன் சுற்றுச் சூழல், தொழில்சார் நிபுணத்துவப் பிரிவின் அறிக்கை உடனடியாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.நீர் மாசுக்குக் காரணமான நிறுவனம் மற்றும் தரப்புக்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று கட்டளை பிறப்பிக்கப்படவிருந்தது.

எனினும், கட்டளையின் பிரதிகள் நேற்று நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனையடுத்து இதன் பிரதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை கிடைத்ததும் அடுத்த கட்டச்சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படும் என பாதிக்கப்பட்ட தரப்பின் சிரேஸ்ட சட்டதரணி சோ. தேவராஜா தெரிவித்துள்ளார்.

Related posts: