நோபல் பரிசை பெறுவதற்கு பாப் டிலன் ஸ்வீடன் செல்ல மாட்டார்!
Friday, November 18th, 2016
இலக்கியத்துக்கான நோபல் பரிசை நேரடியாகபெறுவதற்கு அமெரிக்க பாடகர் பாப் டிலன் ஸ்வீடன் செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தங்களுக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் கிடைத்ததாக தெரிவித்துள்ள ஸ்வீடன் அகாடமி, அக்கடிதத்தில், முன்னரே ஒப்புக்கொண்ட கடமைகளால் அடுத்த மாதம் நடக்கவுள்ள நோபல் பரிசு வழங்கும் நிகழ்வில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று டிலன் தெரிவித்துள்ளதாக, ஸ்வீடன் அகாடமி கூறியுள்ளது.
தனக்கு நோபல் பரிசு வழங்கப் போவதாக அறிவித்துள்ளதால் மிகவும் கெளரவிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும், இந்த விருதை நேரடியாக வாங்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் டிலன் தெரிவித்துள்ளதாக, நோபல் விருது வழங்கும் அகாடமி, மேலும் தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு பெறுபவர் என்ற முறைப்படி, தற்போதிலிருந்து அடுத்த ஜூன் மாதத்துக்குள் நோபல் பரிசு ஏற்புரையை டிலன் வழங்க வேண்டும்.75 வயதாகும் டிலன், பெருமைமிக்க இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத முதல் நோபல் பரிசு வெற்றியாளர் அல்ல.
இதற்கு முன்னர், 2005 மற்றும் 2007 நோபல் பரிசு வென்ற ஹரோல்ட் பின்டர் மற்றும் டோரிஸ் லெஸிங் ஆகியோரும் நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ளாத மற்ற வெற்றியாளர்கள் ஆவர். இது குறித்து ஸ்வீடன் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளா விட்டாலும், பாப் டிலனை போலவே இந்த விருது அவர்களுக்கு உரியதாகும். ”
”டிசம்பர் 10, 2016-இல் தொடங்கி, ஆறு மாதங்களுக்குள் நோபல் பரிசு ஏற்புரையை அவர் வழங்க வேண்டும். அது தான் இந்த விஷயத்தில் அவரின் ஒரே பங்காகும்” என்று தெரிவித்துள்ளது.

Related posts:
|
|
|


