“நூற்றாண்டிற்கான பறவையாக” தெரிவானது புயூட்கெடெக் பறவை!

Wednesday, November 29th, 2023

நியூசிலாந்தின் Forest and Bird அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் “நூற்றாண்டிற்கான பறவையாக” ( (Bird of the Century)  Pūteketeke ) புயூட்கெடெக் எனும் பறவை தெரிவாகியுள்ளது.

சுற்றுச்சூழலை காப்பதில் முன்னணியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் ஆர்வலர்களின் Forest and Bird அமைப்பு Bird of the Century என்ற பெயரில், “நூற்றாண்டிற்கான பறவை” எது என்பதை தேர்ந்தெடுக்க ஒரு போட்டியை நடத்தி வருகிறது.

பொதுமக்கள் பலரும், பறவைகள் ஆர்வலர்களும் இதில் பங்கேற்பது வழக்கம். இப்போட்டி 2005 ஆம் ஆண்டில், உலகில் அரிதாகி வரும் பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வருடம் சுமார் 200 நாடுகளில் இருந்து பலர் பங்குபெற்று 3.5 இலட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். அதிகம் பேர் பங்கேற்றதால் வாக்களிப்பும், அதன் தொடர்ச்சியாக முடிவுகளும் தாமதமானது.

பங்கேற்றவர்களின் முடிவுகளில், இறுதியாக புயூட்கெடெக் Pūteketeke எனும் பறவை இந்த நூற்றாண்டிற்கான பறவை என தெரிவானது.  முதலிடம் பெற்ற இப்பறவை Australasian Crested Grebe என்றும் அழைக்கப்படுகிறது.

ஏரிகளில் காணப்படும் பறவை வகையை சேர்ந்த  Pūteketeke உலகில் தற்போது 3,000-இற்கும் குறைவாகவே உள்ளது.

புயூட்கெடெக்க்கு  2,90,374 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.  இதேநேரம் நியூசிலாந்தின் கிவி பறவை 12,904  வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், உலகின் அறிவார்ந்த பறவை எனப்படும் கிளி வகையை சேர்ந்த Kea 12,060 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

“2023 ஆம் ஆண்டில், இந்த நூற்றாண்டின் பறவையாக Pūteketeke தகுதி பெறுகிறது, ஏனெனில் அவற்றின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது.

அச்சுறுத்தலுக்குள்ளாகி அரிதாகி வரும் பறவை இனங்களுக்கு உதவினால், மீண்டும் அவை பெருகும்,” என தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

000

Related posts: