தென்சீனக் கடலில் சீனாவிற்கு உரிமையில்லை!

Wednesday, July 13th, 2016

பல வருட கால இழுபறி மற்றும் முரண்பாடுகளை அடுத்து, தென்சீனக்கடலில் தனக்கு வரலாற்று ரீதியாக உரிமை இருப்பதாக சீனா கூறுவதை சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

தென்சீனக்கடல் விவகாரம் தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ், தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சர்வதேசத் தீர்ப்பாயத்தில் சீனாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், சீனா கையெழுத்திட்டுள்ள ஐ.நா. கடல் எல்லை ஒப்பந்தத்தை மீறுவதாக பிலிப்பைன்ஸ் குறிப்பிட்டிருந்தது. ஆனால், தான் சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரிக்கப்போவதாகவும், தனது நலன்களை தானே பாதுகாத்துக்கொள்வோம் என்று சீனா முன்னதாகவே கூறியது நினைவுக்கூரதக்கது.

பிலிப்பைன்சின் முறையீட்டினை அடுத்து நடந்த விசாரணைக்குப் பின் தனது முடிவை அறிவித்த தீர்ப்பாயம் சீனாவிற்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்துள்ளது. அதில், தென்சீனக் கடல் வரைபடத்தில் ஒன்பது வரிக்கோடுகளின் மூலம் சீனா குறிப்பிடும் பகுதிகள் அனைத்தும் சீனாவுக்கு சொந்தம் கிடையாது.

சீனா தென்சீனக்கடல் பகுதியில் செயற்கையாக தீவுகளை கட்டமைக்கும் பணியினைச் செய்ததன் மூலம் இயற்கைச் சூழலுக்கு கேடு விளைவித்துள்ளதாகவும், பிலிப்பைன்ஸின் அடிப்படை உரிமையில் தலையிட்டதாகவும் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் சீனா சட்டப்பூர்வ உரிமை கொண்டாட முடியாது என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச தீர்ப்பாயத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அந்தத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பையும் ஏற்கப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: