துருக்கி-சிரியா உயிரிழப்பு 24,000 – இடிபாடுகளில் இருந்து 10 நாட்களேயான சிசு மீட்பு – சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Saturday, February 11th, 2023

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 700 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், நேற்று (10) இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 நாட்களே ஆன சிசுவும் அதன் தாயும் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகள் விரைவாகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி ரசேப் தயிப் எர்டோகன் அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், கடும் குளிரான காலநிலையினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்கள் வீடுகளை இழந்து உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கிடையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் நேற்று நிலநடுக்கத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டதாகவும், தனது மனைவி அஸ்மாவுடன் அலெப்போவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றதாகவும் சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரை எதிர்த்துப் போராடும் மனிதாபிமானப் படைகள் மூலம் வழங்க வேண்டும் என்று பஷர் அல்-அசாத்தின் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

அதேவேளை, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை நிவாரணப் பணிகளை சிக்கலாக்கி வருவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: