துருக்கியில் கைதான ராணுவ அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்கா!

Sunday, July 17th, 2016

துருக்கியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர் அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுடன் செயல்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

துருக்கியில் ஆயிரக்கணக்கான ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக மேற்கொள்ளப்படும் புலனாய்வுகள் சட்டப்படியாக நடைபெற வேண்டுமென துருக்கிய ஆட்சியாளர்களை அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி கேட்டு கொண்டுள்ளார்.

இந்த எழுச்சியில் அமெரிக்க ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருப்பது நேட்டோ கூட்டணியில் இருக்கின்ற இரு நாட்டு உறவுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள துருக்கிய மதப் போதகர் ஃபாதுல்லா ஹியூலென் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னணியில் இருப்பதாக பேசிய ரசீப் தையிப் எர்துவான், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரை ஒப்படைக்க வேண்டுமென கூறியிருந்தார்.

ஆனால் ஹியூலென் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஹியூலெனை ஒப்படைக்கும் விவகாரத்தை கருத்தில் கொள்வதற்கு, துருக்கி குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல பொது மக்கள் உள்பட 260 க்கு மேலானோர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்திருக்கிறது.

Related posts: