துருக்கியர்கள் விசா இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயணிக்க பரிந்துரை!
Friday, May 6th, 2016
துருக்கி நாட்டு குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதற்கு விசா வாங்கவேண்டும் என்ற நடைமுறையை ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரும்படி ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
ஆனால் இதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒன்றிய நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அத்துடன் துருக்கி மேலும் சில தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
கிரேக்கத்துக்குள் வந்த அகதிகளை துருக்கி மீளவும் எடுத்துக்கொள்வதற்கு பதிலாகவே துருக்கிக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு வர்த்தக உடன்பாடு. கிரேக்கத்திற்கு வரும் அகதிகளை திருப்பி எடுத்துக்கொள்ளவும், மனிதக்கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் துருக்கி உடன்பட்டதற்கு கைம்மாறாக துருக்கிக்கு நிதி அளிப்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் அது இணையவும் விசா இல்லாமல் பயணிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பா மீதான தன் செல்வாக்கு குறித்து துருக்கி உணர்ந்தே இருக்கிறது. விசா இல்லா பயணத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் அகதிகள் தொடர்பான ஒப்பந்தம் சாத்தியமில்லை என்று துருக்கிய பிரதமர் வலியுறுத்தினார். ஆனால் தற்போதைய துருக்கிய அரசை ஐரோப்பா ஊக்குவிக்கவேண்டுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
“ஐரோப்பா தன் கொள்கைகளில் உறுதியாக இருக்கவேண்டும். தற்போதைய சூழலில் துருக்கிய அரசு கேட்பதெல்லாம் கொடுக்கப்பட்டால், துருக்கிய அரசும் எர்தோஜனும் நாட்டின் முக்கிய ஊடகவெளியையெல்லாம் ஆக்ரமிக்கத் தயங்க மாட்டார்கள்” என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
.
Related posts:
|
|
|


