தீவிரமாகும் ‘டெப்பி’ சூறாவளி: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

Monday, March 27th, 2017

அவுஸ்ரேலியாவில் டெப்பி என்ற சூறாவளி தீவிரமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் கடற்கரை பகுதியில் தான் இந்த சூறாவளி கடக்க உள்ளது.அவுஸ்ரேலியா நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இந்த சூறாவளி கரையைக் கடக்கும் எனவும், பெரும் சேதங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூறாவளி கரையைக் கடக்கும்போது மணிக்கு சுமார் 240 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து குயின்ஸ்லேண்ட் முதல்வரான Annastacia Palaszczuk என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட யாஸி சூறாவளியை விட இதுக் கடுமையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது வரை சுமார் 3,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சூறாவளி மற்றும் பலத்த மழையானது Townsville மற்றும் Proserpine ஆகிய பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மேலும், குறிப்பிட்ட இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறு’ அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறாவளியின் தாக்கத்தை சீர்ப்படுத்தும் பொருட்டும், பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை அளிக்கவும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா அரசு தெரிவித்துள்ளது.

Related posts: