ரஷ்ய விமான தாங்கி கப்பலை கண்காணிக்க தயாராகும் பிரித்தானியா!

Friday, January 27th, 2017

ரஷ்யாவின் விமான தாங்கி கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் பிரித்தானியாவை கடக்கும்போது பிரித்தானிய போர் கப்பல் மற்றும் மூன்று போர் விமானங்கள் உன்னிப்பாக அவதானிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் இருந்த ரஷ்யாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ரஷ்யாவின் அட்மிரல் குஸ்தோவ் விமான தாங்கி கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் ஆங்கிலக் கால்வாயை கடந்து செல்லவுள்ளன. இவை பிரிட்டிஷ் கடற்பகுதியை எட்டும்போது அதற்கு முகம்கொடுக்க தயாராக பிரித்தானிய போர்க்கப்பல் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய போர் கப்பல்கள் அதன் பயணத்தில் பின்தொடர்ந்து வழியனுப்பப்படும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் சேர் மைக்கல் பெல்லோன் குறிப்பிடும்போது, “அட்மிரல் குஸ்தோவ் தனது கோளைத்தனமான நடவடிக்கைக்கு பின் ரஷ்யாவுக்கு திரும்பும் வழியில் நாம் அதனை உன்னிப்பாக அவதானிப்போம். அவமானகரமான இந்த கப்பலின் நடவடிக்கையால் சிரிய மக்களே வேதனை அனுபவித்தார்கள்” என்றார்.

சிரியாவில் வான் தாக்குதல்களில் பங்கேற்றுவிட்டே ரஷ்ய விமான தாங்கி கப்பல் தற்போது ரஷ்யாவுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த கப்பல் இம் மாத ஆரம்பத்தில் மத்திய தரைக் கடலில் இருந்து வெளியேறியது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ரஷ்யாவின் வான் தாக்குதல் உதவியோடு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு பலம்பெற்றுள்ளது. கடந்த டிசம்பரில் அரச படையால் தீர்க்கமான நகரான அலெப்போவை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்க முடிந்தது.

அட்மிரல் குஸ்தோவ் ரஷ்ய விமானப்படையிடம் உள்ள ஒரே விமான தாங்கி கப்பலாகும். இதற்கு துணையாக அணு ஆயுத திறன் கொண்ட மூன்று போர் கப்பல்கள் பயணிக்கின்றன.

coltkn-01-27-fr-04162719148_5176822_26012017_MSS_CMY

Related posts: