இஸ்‌ரேல் – காஸா போர் நிறுத்தம் – முதல்கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பிணைய கைதிகள் விடுதலை!

Friday, November 24th, 2023

இஸ்‌ரேல் – காஸா போர் நிறுத்தத்தின் முதல் கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பிணைய கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி 45 நாட்களை கடந்து விட்டது. இந்த போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கத்தாரில் நடைபெற்ற அமைதிப் பேச்சில் நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என இஸ்ரேல் அறிவித்தது.

காஸாவில் நேற்றுமுதல் போர் நிறுத்தம் செய்வதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டது.

“இதையடுத்து இன்று காலைமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாகவும், இன்று மாலைமுதல் பிணைய கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கும்” என்றும் கத்தார் நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் மஜித் அல் அன்சார் தெரிவித்துள்ளார்.

இதன் முதல்கட்டமாக இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 13 பிணைய கைதிகள் விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பின்னர் தொடர்ந்து 4 நாட்கள் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் உள்ள மொத்தம் 50 பிணைய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்புமே இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானது என்று கூறிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: