தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Wednesday, August 10th, 2022

இராணுவ மற்றும் ஆயுதப் பயிற்சிகள் மூலம் தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய பயணத்தில் தாய்வானும் இடம்பெற்று, சீனாவுக்கு பெரும்கொதிப்பை ஏற்படுத்தியது.

நான்சி பொலோசி தாய்வான் வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுபவர்கள் சாம்பலாகி போவது உறுதி.” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சீன அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஜீ ஜின்பிங்கின் எதிர்ப்பைத் தொடர்ந்து நான்சி பெலோசி தாய்வான் செல்வாரா? பின்வாங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவியது. இந்த நிலையில் தனது பயணத்தில் பின்வாங்காமல் அவர் தாய்வானுக்கு கடந்த 2 ஆம் திகதி இரவு சென்றடைந்தார்.

தாய்வான் தலைநகர் தைபே சென்றடைந்த அவருக்கு அந்நாடு இராணுவ பாதுகாப்பை அளித்தது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி 3 ஆம் திகதி தாய்வான் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுதொடர்பில், கடந்த செவ்வாய்கிழமை சீன பாதுகாப்புத்துறை தெரிவிக்கையில், “சீன ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

கூட்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு தாய்வானின் கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தவுள்ளோம்.” என்று அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியில் சீனாவில் எந்நேரமும் குண்டுச் சத்தம் கேட்பதாகவும், சீனா தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தாய்வானும் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

000

Related posts: