தற்கொலைத் தாக்குதல்- பாகிஸ்தான் இம்ரான் கட்சி வேட்பாளர் பலி!

Tuesday, July 24th, 2018

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர்-பக்துன்கவா மாகாணத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சி வேட்பாளரரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

 இதுகுறித்து அந்த மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்ட காவல்துறை அதிகாரி மன்சூல் அஃப்ரிடி கூறியதாவது:

 வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சியின் சார்பில் பிகே-99 தொகுதி வேட்பாளராக இக்ரமுல்லா காந்தாபூர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

 இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த அவரது காருக்கு அருகே வந்த பயங்கரவாதி, தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

 இதில் படுகாயமடைந்த இக்ராமுல்லாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 இந்தத் தாக்குதலில் இக்ராமுல்லாவின் கார் ஓட்டுநரும் உயிரிழந்தார்; அவரது பாதுகாவலர் 3 பேர் படுகாயமடைந்தனர் என்றார் அவர்.

 கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் நடைபெற்று வரும் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சி அரசில் விவசாயத் துறை அமைச்சராக இக்ராமுல்லா பொறுப்பு வகித்து வந்தார்.

 இதற்கிடையே, ஜாமியத்-உலேமா-இஸ்லாம்-பஸல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அக்ரம் கானை படுகொலை செய்வதற்கு நடந்த மற்றொரு முயற்சியில், அவர் உயிர் தப்பினார்.

 கடந்த 10 நாள்களில் அவரைக் கொல்வதற்காக நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: