டெக்சாஸில் கடும் மழை!

Thursday, August 31st, 2017

அமெரிக்காவைத் தாக்கிய ஹார்வி புயலைத் தொடர்ந்து பெய்த மழை ”500 ஆண்டுகள் காணாத மழை” என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் 600 மில்லி மீட்டர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

மாகாணத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மாகாணம் முழுவதும் பிரதான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கல்வி நிலையங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.

புயல் மழையால் டெக்சாஸ் மாகாணம் மற்றும் அண்மித்த பகுதிகளில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மின் கம்பங்கள் சரிவு, சாலைகள் சேதம், மேம்பாலங்கள் சேதம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கோடிக்கணக்கான டொலர்கள் இழப்பு நேரிட்டுள்ளது.

மீட்புப் பணியில் 12,000-ற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 30,000 பேர் உள்ளரங்குகள் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் கிரெக் ஆபட் கூறியுள்ளார்.

மாகாணத்தின் மிகப்பெரிய நகரான ஹூஸ்டன் பெரும் பாதிப்பிற்கு முகங்கொடுத்துள்ளது.

ஹூஸ்டனில் மட்டுமே 16 ஹெலிகாப்டர்கள் இரவும் பகலும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக நகர மேயர் சில்வஸ்டர் டர்னர் தெரிவித்துள்ளார்.

Related posts: