டிரம்ப் கருத்துக்கு ஜெர்மனி கடும் எதிர்ப்பு!

Tuesday, June 12th, 2018

வட அமெரிக்க நாடான, கனடாவில் நடந்த, ‘ஜி – 7’ உச்சி மாநாட்டில், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வெளியேறியதோடு, கோபமாக, ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் பதிவிட்டதற்கு, ஜெர்மனி கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளது.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய, ஏழு வளர்ந்த நாடுகளின், ‘ஜி – 7′ அமைப்பு உச்சி மாநாடு, கனடாவின், கியூபெக் மாகாணத்தில் உள்ள, லமால்பே நகரில், 8 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தது.’ரஷ்யாவை, மீண்டும், இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும்’ என, அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். இதற்கு, மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது, டிரம்ப் இறக்குமதி வரியை விதித்திருப்பது, பிற நாடுகள் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளன. ‘டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது’ என, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம்அடைந்த டிரம்ப், கூட்டம் முடிவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறி, சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, பிற நாடுகளின் தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.இதற்கிடையே, விமானத்தில் இருந்தபடியே, ‘ஜி – 7’ மாநாடு குறித்து, காரசாரமாக, அதிபர் டிரம்ப், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டார்.

 மேலும், ‘ஜி – 7’ கூட்டறிக்கைக்கு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற்றார். கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனத்தையும், டிரம்ப் முன்வைத்தார்.இந்நிலையில், டிரம்ப்பின், ‘டுவிட்டர்’ பதிவுகள் தொடர்பாக, ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர், ஹெய்கோ மாஸ் கூறுகையில், ”அளவுக்கு அதிகமாக வைத்திருந்த நம்பிக்கையை, ஒற்றை, ‘டுவிட்’ மூலம், குறுகிய நேரத்தில், டிரம்ப் உடைத்து விட்டார்,” என்றார்.ஜெர்மன் பிரதமர், ஏஞ்சலா மெர்க்கலும், டிரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”அமெரிக்கா நடத்தி வரும் வரி போரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

”அமெரிக்காவின் எதேச்சதிகார போக்கிற்கு, இனியும் ஐரோப்பிய யூனியன் அடங்கி போகாது. டிரம்பின் வர்த்தக நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்தெழுவோம்,” என்றார்.

Related posts: