இந்தோனேஷிய நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக உயர்வு!

Wednesday, November 23rd, 2022

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் (BNPB) 151 பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், 22,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 58,000க்கும் மேற்பட்ட மக்கள் அனர்த்தத்தின் பின்னர் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் நேற்றையதினம் 5.6 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியது. ஜாவா தீவில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகிலே இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது பல கட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக மிகப்பெரும் சேதங்களும் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கங்களினால் பாதிக்கப்படும் பல தீவுகளை கொண்ட ஒரு நாடாகும்.

9.1 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவின் மேற்கு கடற்கரையினை தாக்கியது.

இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும், இது பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளைத் தாக்கிய ஒரு பெரிய சுனாமியை ஏற்படுத்தியது. குறைந்தது 227,898 பேர் இதன்போது உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts: