டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் இலங்கை ஊழியர்களுக்கு கொரோனா இல்லை !

Thursday, February 27th, 2020

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் சேவையாற்றிய இலங்கை ஊழியர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனைகளில் உறுதியானதை அடுத்து அவர்கள் இவ்வாறு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து அவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஹொங்கொங்கில் இருந்து 3,700 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4 ஆம் திகதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டயமன்ட் பிரின்ஸஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இந்திய ஊழியர்கள் 16 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்த கப்பலில் இருந்த 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி அழைத்து வரப்பட்டவர்களில் 119 இந்தியர்கள், 2 இலங்கையர்கள் மற்றும் நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அழைத்து வரப்பட்டுள்ளனர்

Related posts: