சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் இரத்தம் மாதிரி! –  வழக்கில் மீண்டும் திருப்பம்!

Monday, August 1st, 2016

சுவாதியை வெட்ட்ப பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில் இரண்டு பேரின் ரத்தம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் இரத்தமாதிரி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேகரிப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், ராம்குமாரை நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் ரகசியமாக அழைத்து வந்தனர். அங்கு சிறைக்கைதிகள் வார்டில் அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது.

முன்னதாக போலீசார் கைது செய்தபோது தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட காயத்திற்கு நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது ராம்குமாருக்கு தொண்டை வலி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே நேற்று ராயப்பேட்டை மருத்துவமனையில் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு, தையல் போட்ட இடத்தில் வலி இருப்பதாக கூறியதால், அவருக்கு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ராம்குமாரின் இரத்த மாதிரி எதற்காக சேகரிக்கப்பட்டது என்பது குறித்து போலீஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகையில், ‘சுவாதியை வெட்ட பயன்படுத்திய அரிவாளில் 2 பேரின் இரத்தம் படிந்துள்ளது. அதில் ஒன்று சுவாதியின் ரத்தம் என்று தெரியவந்துள்ளது. எனவே, அந்த இன்னொரு ரத்தம் ராம்குமாருடையது தானா? என்பதை உறுதிபடுத்துவதற்காக அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது’ என்றனர்.

இந்தத் தகவலால் சுவாதி வழக்கில் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது. இதுவரை ராம்குமார் கூறியதாக வெளியான வாக்குமூலத்தில், ‘சுவாதியை வெட்டி விட்டு தப்பி வரும்போது தனக்கோ அல்லது வேறு யாருக்கோ அதே அரிவாளால் காயம் ஏதும் ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை’ என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: