சும்மா இருக்க சம்பளம் வேண்டாம் – சுவிட்சர்லாந்து மக்கள்!

Monday, June 6th, 2016

சுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதந்தோறும் அரசே சம்பளம் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு மக்கள் நிராகரித்து விட்டனர்.

உலகின் செல்வம் மிகுந்த ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, புதுமையான திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, அந்நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வேலைக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் மாதந்தோறும்,2500 பிராங்  சம்பளமாக அரசே வழங்கும், குழந்தைகளுக்கு, 1000 பிராங் வழங்கப்படும்.

வறுமையை ஒழிக்கும் நோக்குடன், அந்நாட்டில் சில அறிஞர்கள் இத்திட்டத்தை முன்வைத்தனர். அரசும் அந்த திட்டத்தை ஏற்றது. எனினும் அங்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதற்கும், பொதுமக்களின் ஒப்புதல் அவசியம்.

எனவே இதற்கு ஒப்புதல் கோருவதற்கான பொது வாக்கெடுப்பு, அந்நாட்டில் நேற்று நடந்தது.ஆனால், ‘இந்த சம்பள திட்டம் வேண்டாம்’ என, மக்கள் நிராகரித்து விட்டனர்.

வாக்குப் போட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் வருமாறு:

சுவிட்சர்லாந்தில், 3 சதவீதம் பேர் மட்டுமே வேலையின்றி உள்ளனர். அவர்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.

அதுபோலவே, சாதாரண வருமானத்தை ஈட்டும் மக்களுக்கு அங்கு சமூக திட்டங்கள் உள்ளன. புதிய சம்பள திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிதி நெருக்கடியை சமாளிக்க, அரசு, வரியை உயர்த்தும். தொழில் நிறுவனங்களுக்கான வரியும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் மறைந்து, வேலைக்கு ஆள் இல்லாத சூழல் உருவாகும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதனால் தான், மக்கள் இந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர்.

மக்களின் சமூக பாதுகாப்பிற்காக, குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசே சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்த முதல் நாடு, சுவிட்சர்லாந்து. பின்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் இந்த திட்டம் குறித்து ஆலோசித்து வருகின்றன. இருப்பினும் அது தொடக்க நிலையில் தான் இருக்கிறது.

Related posts: