சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் – போர் பதற்றத்தால் இரு அணிகளாக பிரியும் உலக நாடுகள் – மூன்றாம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Thursday, October 26th, 2023

இஸ்ரேல் – பலஸ்தீன போரின் எதிர்விளைவாக அண்டை நாடான சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்தில் எட்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்பதாக இஸ்ரேல், காஸா மீது கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் தாக்குதல் நடத்தி வருவதுடன், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அண்டை நாடான சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்றையதினம் சிரியா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் சிரிய இராணுவத்தின் ஐந்தாவது பிரிவின் தலைமையக கட்டடம் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் போர் பதற்றம் காஸாவை தாண்டி உலக நாடுகளிலும் எதிரொலிக்கும் அச்ச சூழ்நிலை எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாய் இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியாவில் நடக்கும் தாக்குதல்கள் பார்க்கப்படுவதுடன், உலக வல்லரசுகளும் இரு அணிகளாக பிரிந்து இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன.

இது இவ்வாறிருக்க இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அதற்கு எதிரான அமைப்பின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

லெபனானின் பெய்ரூட்டில் நடந்த இச்சந்திப்பில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஹமாஸ் துணைத்தலைவர் சலே அல் அரவுரி, பலஸ்தீன ஜிகாத் தலைவர் ஜியாத் அல் நகாலா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இஸ்ரேல் மீது வரும் நாட்களில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இணைந்து தாக்குதல்களை நடத்த கூடுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சூழ்நிலை எழுந்தால் அமெரிக்கா சார் மற்றும் ரஷ்யா சார் அணிகள் நேரடியாக ஆதரவை வழங்கும் நிலைமை உருவாகலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிரியா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளதால் காஸா பகுதி மக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக போர் தொடுக்க வாய்ப்பு உள்ளது.

சுமார் ஒரு இலட்சம் வீரர்கள், இரண்டு இலட்சம் அதிநவீன ஏவுகணைகள், ஏராளமான பீரங்கிகளை கொண்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேரடியாக போரில் இறங்கினால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

பலஸ்தீன மக்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன.

இதே சூழல் தொடர்ந்து நீடித்தால் அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா, சீனா தலைமையில் எதிரணியும் போரில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது.

எனவே, இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் மூன்றாம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருப்பதாகவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: