சிரியாவில் ஐ.எஸ் நிலைகள் மீது துருக்கி தாக்குதல்!

Wednesday, August 24th, 2016

சிரிய கிளர்ச்சியாளர்கள் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழு மீது தாக்குதல் ஒன்றை ஆரம்பித்திருக்கும் நிலையில் வடக்கு சிரியாவின் ஜரப்லுஸ் நகரில் துருக்கி ஐ.எஸ் இலக்குகள் மீது குண்டுகளை வீசியுள்ளது.

துருக்கி ஆதரவு கொண்ட சுமார் 1,500 சிரிய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் ஒன்றுக்காக துருக்கி நகர் காசியடெப்பில் காத்துள்ளனர். துருக்கியில் கடந்த சனிக்கிழமை திருமண நிகழ்ச்சியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டனர். குர்திஷ் போராளிகள் வசமிருக்கும் துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவின் மன்பிஜ் நகர் மீதும் துருக்கி ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குர்திஷ்கள் ஐ.எஸ் குழுவுக்கு எதிராகவே அண்மையில் மன்பிஜ் நகரில் முன்னேற்றம் கண்டனர்.

சிரிய எல்லையை ஒட்டி இருக்கும் துருக்கி நகரான கர்கமிஸில் நேற்று ஐ.எஸ்ஸின் இரு மோட்டார் குண்டுகள் விழுந்ததை அடுத்து துருக்கி ஐ.எஸ் நிலைகள் மீது குறைந்தது 40 குண்டுகளை வீசியதாக துருக்கி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கர்கமிஸில் இடம்பெற்ற தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. வடக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ் குழு முழுமையாக சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவுசொக்லு வலியுறுத்தியுள்ளார்.

துருக்கி கடந்த திங்கட்கிழமையும் ஐ.எஸ் நிலைகள் மீது குண்டுகளை வீசியதோடு மன்பிஜ் பகுதியில் குர்திஷ்கள் மீது அதே அளவில் தாக்குதல்களை நடத்தியது.. சிரியாவின் வை.பீ.ஜி குர்திஷ் போராளிகள் வடக்கு சிரியாவில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக அண்மைக் காலத்தில் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இதன்மூலம் ஐ.எஸ் குழு இம்மாதத்தில் மன்பிஜ் நகரில் இருந்து ஜரப்லுஸ் நகரை நோக்கி பின்வாங்கி உள்ளது.

எனினும் துருக்கியில் தனிநாடு கோரி போராடும் அந்நாட்டின் பி.கே.கே குர்திஷ் பிரிவினைவாதிகளுடன் சிரிய குர்திஷ்கள் தொடர்புபட்டிருப்பதால் அவர்களை எல்லைப் பகுதியில் இருந்து வெளியேற்றுவதில் துருக்கி தீவிரம் காட்டியுள்ளது. இந்நிலையில் துருக்கியின் காசியன்டெப்பில் இருந்து சிரியாவுக்கு நுழையும் போராளிகள் துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்கள் என்று நம்பப்படுகிறது. தாம் சுயாதீன சிரிய படையின் கொடியின் கீழ் போராடுவதாக அந்த கிளர்ச்சியாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: