சிரியாவில் உதவி வாகன தொடரணி தாக்கி அழிப்பு!

Wednesday, September 21st, 2016

சிரியாவின் அலெப்போ நகரில் உதவிகளை ஏற்றிச் சென்ற வாகன தொடணி மீது சிரியா அல்லது ரஷ்ய போர் விமானம் மேற்கொண்ட தாக்குதலில் 12 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா மற்றும் அமெரிக்கா கடும் கோபத்தை வெளியிட்டுள்ளன.

எனினும் அமெரிக்க மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டு தற்போது அமுலில் உள்ள யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதாக சிரிய அரசு பிரகடனம் செய்துள்ளது. மறுபுறம் அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களும் மீண்டும் யுத்தத்திற்கு திரும்பப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வாகன தொடரணி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு உரும் அல் குப்ரா நகரில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானதை ஐ.நா உறுதி செய்துள்ளது. எனினும் அது பற்றி மேலதிக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

எனினும் சிரியா, யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதாக பிரகடனம் செய்து சில மணி நேரத்திலேயே இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து சிரிய அரசின் நட்பு நாடான ரஷ்யாவுடனான எதிர்கால ஒத்துழைப்புகள் பற்றி மீள்பரிசீலனை செய்யப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. “இந்த வாகன தொடரணியின் நோக்கம் பற்றி சிரிய அரசு மற்றும் ரஷ்யா தெரிந்தே இருந்தது” என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உதவிப் பணியாளர்கள் சிரிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியின்போதே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வான்வழி தாக்குதலை சிரியா அல்லது ரஷ்ய விமானமே நடத்தி இருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிரிய அரபு செம்பிறை சங்க தன்னார்வ பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அடங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை ‘இறக்கமற்ற தாக்குதல்’ என வர்ணித்திருக்கும் ஐ.நா உதவிகளுக்கான தலைவர் ஸ்டீபன் ஓபிரைன், வேண்டுமென்றே நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் யுத்த குற்றமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

18 முதல் 31 லொரிகள் கொண்ட தொடரணி மீதே நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஐ.நா பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அலெப்போவுக்கு அருகில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 78,000 பேருக்கு உதவிகளை விநியோகிக்கும் நோக்கிலேயே இந்த லொரிகள் சென்றுள்ளன.

சம்பவத்தை பார்த்த ஒருவர் தொலைபேசி ஊடே ரோய்டர்ஸுக்கு அளித்த தகவலில், சிரிய செம்பிறை சங்கத்திற்கு சொந்தமான மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி வண்டிகள் மீது ஐந்து ஏவுகணைகள் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் ரஷ்ய மற்றும் அமெரிக்காவின் சிரியா மீதான மற்றுமொரு யுத்த நிறுத்த முயற்சி தோல்வி அடைவதையே காட்டுவதாக உள்ளது.

கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி அமுலுக்கு வந்த இந்த யுத்த நிறுத்தத்தை சிரிய அரச படை மற்றும் கிளர்ச்சியாளர்கள் பரஸ்பரம் பல தடவைகள் மீறி இருந்தனர். இந்நிலையில் இந்த யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதாக சிரிய அரசு அறிவித்துள்ளது.

“இதனை காப்பாற்ற முடியுமா என்பது எமக்கு தெரியவில்லை” என்று அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு யுத்த நிறுத்தம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“ரஷ்யா தமது நோக்கத்தை விரைவாகவும் தீவிரமாகவும் வெளிப்படுத்த வேண்டும் அப்படி இல்லாவிட்டால் இதனை நீடிக்க மற்றும் பாதுகாக்க முடியாது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

சிரிய இராணுவத்தின் அறிவிப்பை அடுத்து அலப்போ மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் கடுமையாக இலக்கு வைக்கப்பட்டதாக நகருக்குள் இருக்கும் ஏ.எப்.பி செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார். அங்கு இடைவிடாது குண்டு மழை பொழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மேலும் எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

அமுலுக்கு வந்த யுத்த நிறுத்தத்தில் சிரியாவில் முற்றுகையில் சிக்கி இருக்கும் மக்களுக்கு உதவி விநியோகங்களை வழங்குவது முக்கிய அம்சமாக இருந்தது.

எனினும் ஹோம்ஸ் மாகாணத்தின் முற்றுகையில் உள்ள தல்பிசெஹ் பகுதிக்கு திங்களன்று உதவிகள் விநியோகிக்கப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் சிரியாவில் விநியோகிக்க முடியாமல் பெரும்பாலான உதவி வாகனங்கள் தொடர்ந்தும் காத்து நிற்கின்றன.

அடைய கடினமான முற்றுகை பகுதிகளுக்கு உதவி விநியோகங்களை எடுத்துச் செல்ல அரசின் அனுமதி தேவை என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் பாதுகாப்பு, மோதல்கள் மற்றும் நிர்வாக தாமதங்கள் காரணமாக பெரும்பாலான பகுதிகளுக்கு உதவிகள் செல்வதில் சிக்கல் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க கூட்டுப்படை போர் விமானங்கள் டெயிர் அல் சூர் நகரில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக போராடும் சிரிய துருப்புகள் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த யுத்த நிறுத்தம் கேள்விக்குள்ளானது.

இந்த தாக்குதல் தவறுதலாக இடம்பெற்றது என்பதை அமெரிக்கா ஒப்புக் கொண்டதோடு அதற்காக வருத்தமும் வெளியிட்டது.

இந்த தாக்குதலில் 60 சிரிய துருப்பினர் கொல்லப்பட்டாக ரஷ்யா குறிப்பிட்டிருந்தது

coltkn-09-21-fr-06153623522_4784893_20092016_mss_cmy

Related posts: