சிரியாவில் இரசாயனத் தாக்குதல் நடந்தது: உறுதி செய்தது சர்வதேச அமைப்பு!
Thursday, May 17th, 2018
சிரியாவின் சாராகேப் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதை, இரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச அமைப்பு (ஓபிசிடபிள்யூ) உறுதி செய்துள்ளது.
சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள சாராகேப் நகரில் எதிரணியினரைக் குறிவைத்து அரசுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ரசாயனத் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல், டோமா நகரில் கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில் 40 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பான விடியோ காட்சிகளும் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதனிடையே, சிரியாவின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப் படை அண்மையில் தாக்குதல் நடத்தியது. ரசாயன ஆயுத தயாரிப்புக் கூடங்களை குறிவைத்து, இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நெதர்லாந்தின் தி ஹேக் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் உண்மை கண்டறியும் குழுக்கள் சிரியாவில் ஆய்வு மேற்கொண்டன.
சாராகேப், டோமா ஆகிய நகரங்களில் இருந்து ஏராளமான மாதிரிகளை சேகரித்த அந்த குழுவினர், ரசாயனத் தாக்குதல் தொடர்பாக அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அந்த மாதிரிகள் ஓபிசிடபிள்யூ-வின் ஆய்வகங்களில் சோதனையிடப்பட்டதில், சாரகேப் நகரில் குளோரின் நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது உறுதியாகியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், டோமா நகரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது யார் என்பதை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை.
Related posts:
|
|
|


