பிரித்தானியாவில் முகக்கவசம் அணிவதற்கான கட்டுப்பாடு நீக்கம்! – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

Tuesday, July 6th, 2021

பிரித்தானியாவில் தற்போது அமுலில் இருக்கும் பெரும்பாலான கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 19ம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் யாரும் முகக்கவசம் அணிய வேண்டிய தேவை இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

டவுனிங் வீதியில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோவிட் பாதிப்பால் அதிக உயிர்சேதங்களை சந்தித்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. தற்போது அங்கு கோவிட் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிட் பரவல் குறைவடையத்தொடங்கியுள்ளது.

இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றது. இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 19ம் திகதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 19ம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் யாரும் முகக்கவசம் அணிய வேண்டிய தேவை இருக்காது பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

16 மாதங்களின் பின்னர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக வீட்டிலிருந்து வேலை செய்யும் அனுமதியும் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 19ம் திகதி அன்று திட்டமிட்டபடி இறுதி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தான் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். சமீபத்திய தரவை மதிப்பாய்வு செய்த பின்னர் ஜூலை 12ம் திகதி இது உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முகக்கவசம் அணிவது தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் பொது மக்கள் தமது பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27,334 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 4,930,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 128,231 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 464,482 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 321 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,337,821 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

Related posts: