சர்வதேச நாடுகளின் அழுத்தம் மியான்மரில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் – இராணுவ புரட்சி தொடர்பில் சீனா!

Thursday, February 4th, 2021

மியான்மரில் இராணுவ புரட்சியை கண்டித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டு அறிக்கையை சீனா தடுத்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் ஷாங் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் ஷாங் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலைவர்கள், அமைச்சரவையில் இடம்பெறும் உச்ச சபையை அமைத்துள்ளனர். மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கூனில், எதிர்ப்பு மற்றும் வன்முறைக்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் செவ்வாயன்று கூடியது, ஆனால் மியான்மர் இராணுவ புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட சீனா ஆதிரிக்காமல் தடுத்தது.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கண்டன அறிக்கை வெளியிடவில்லை. மியான்மர் இராணுவ புரட்சிக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக வீட்டோ அதிகாரத்தை வைத்திருக்கும் சீனாவின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது மியான்மரின் உள்நாட்டு பிரச்சினை என்று கருதுவதால் சீனா கூட்டு கண்டன அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.பொருளாதாரத் தடைகள் அல்லது சர்வதேச நாடுகளின் அழுத்தம் மியான்மரில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.

Related posts:


இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் தேசிய பாடசாலை அதிபருக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு...
யாழ்ப்பாண பல்கலையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை : நிலமைகளைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என ...
சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பிலிருந்த பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை - அமைச்சர...