சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

Thursday, March 23rd, 2017

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாததால், அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மு.க. ஸ்டாலின், சபாநாயகர் தனபால் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லையென குற்றம் சாட்டினார்.

இதற்குப் பிறகு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. முதலில் குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஸ்டாலின் கோரினார்.

அதன்படி, எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 122 சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் உறுப்பினர்கள் 97 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பை புறக்கணித்தனர்.

Related posts: