இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவு – யுத்தம் வெல்லும் வரை போரை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என இஸ்ரேல் பிரதமர்அறிவிப்பு!

Sunday, January 14th, 2024

காஸா நகரங்களில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளி அமைப்புக்கும் இடையிலான போர் ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் கடந்துள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மீண்டும் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். யுத்தம் வெல்லும் வரை போரை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேலை எவராலும் தடுக்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ குறிப்பிட்டுள்ளார்.

போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. அதுவே எங்களின் இலக்கு. ஹமாஸால் இஸ்ரேலை எதுவும் செய்ய முடியாது.

மேலும், காஸா பகுதியில் பல ஹமாஸ் படைப்பிரிவுகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன. வடக்கு காஸாவில் இடம்பெயர்ந்தவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாது எனவும் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றத்தில், இஸ்ரேலின் தாக்குதல் ஐ.நா. இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரானின் ஆதரவு பெற்ற போராளி குழுக்களின் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த நிலையிலேயே பெஞ்சமின் நெதன்யாஹூ மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போரில் இறந்துள்ளனர். மேலும் காஸாவில் கடுமையான உணவு பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர்.

இதனிடையே போரில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களை நினைவுகூரும் வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் மக்கள் அமைதியான பேரணியை நடத்தியுள்ளனர்.

இறந்தவர்களுக்காக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டதுடன் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி பெஞ்சமின் நெதன்யாஹூ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: