கொரியதீவகற்ப அமைதி முடிவுக்கு வருவதற்கு சீனா ஆதரவு!

Sunday, May 6th, 2018

வடகொரிய – தென்கொரிய நாடுகளுக்கிடையிலான போரை நிரந்தரமாக முடித்து வைப்பதற்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

வட கொரிய தலைநகர் பியாங்கியாங்கில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னை வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசியபோது  இந்த விவகாரத்தில் தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரிய தீபகற்பத்தில் போரை நிரந்தரமாக முடித்து வைக்கும் வகையில், அதிகாரப்பூர்வ சமாதான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளுக்கு சீனா தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் வட கொரியா சென்றுள்ள அமைச்சர் வாங் யீ, அந்த நாட்டு அதிபரிடம் தெரிவித்தார்.

மேலும், வட கொரியா தனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டே, அணு ஆயுதங்களைக் கைவிடுவதில் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்த அவர், பொருளாதார முன்னேற்றத்தில் வட கொரியா கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது, அணு ஆயுதத்தைக் கைவிடுவது குறித்த தனது வாக்குறுதிகளை கிம் ஜோங்-உன் உறுதி செய்தார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரியப் போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆகியும், இரு நாடுகளுக்கும் இடையிலான போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் இதுவரை மேற்கொள்ளப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. அப்போது, கொரியப் போரை அதிகாரப்பூர்வமாக முடித்து வைப்பதற்கான சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: